திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 400 இடங்களில் எல்.இ.டி. மின் விளக்குகள் கலெக்டர் தகவல்


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 400 இடங்களில் எல்.இ.டி. மின் விளக்குகள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Nov 2018 3:45 AM IST (Updated: 11 Nov 2018 6:57 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 400 இடங்களில் எல்.இ.டி.விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 14–ந் தேதி (நாளை மறுநாள்) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியாக வருகிற 23–ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது. விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதைத்தொடர்ந்து தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ள ஈசான்ய மைதானம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய இடங்களில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஈசான்ய மைதானத்தில் கோவில் மாட வீதிகளில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவதற்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எல்.இ.டி. மின்விளக்குகளை கலெக்டரிடம் வழங்கினர்

பின்னர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக கிரிவலப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதை அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் இந்த ஆண்டு 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதை முழுவதும் 400 எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. அத்துடன் 77 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களும் பொருத்தப்பட்டு, 4 கட்டுப்பாட்டு அறைகள் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

நெடுஞ்சாலைத் துறை மூலமாக கிரிவலப் பாதையில் செங்கம் பிரிவில் இருந்து அபய மண்டபம் வரை 211 புதிய எல்.இ.டி. மின் விளக்குகள் ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

தீபத்திருவிழாவின்போது பக்தர்களின் வசதிக்காக சுகாதாரத் துறை மூலமாக கிரிவலப்பாதை மற்றும் கோவில் பகுதிகளில் 13 நிரந்தர மருத்துவ முகாம், 3 நடமாடும் மருத்துவ அலகுகள் அமைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story