தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில்: 1 முதல் 8–ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் சீருடை வழங்கப்பட உள்ளது என வாணியம்பாடியில் நடந்த விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
வாணியம்பாடி,
வாணியம்பாடியில் உள்ள இந்து மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எம்.அனந்தகிருஷணன் தலைமை தாங்கினார். வக்கீல் ஆர்.வி.வரதராஜன், செயலாளர் ஜி.குமரேசன், துணை தலைவர் ஜனார்த்தனம், பொருளாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகநல சேவா சங்க தலைவர் டி.வி.ராஜேந்திரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் ஆகியோர் கலந்து கொண்டு நூற்றாண்டு விழா நுழைவாயிலை திறந்து வைத்து, விழா மலரை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–
வருங்காலத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வித்துறையில் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிது. அடுத்தாண்டு முதல் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரையிலும், 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டு 4 சீருடைகள் வழங்கப்படும்.
மாணவர்கள் ‘யூ டியூப்’ வழியில் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனை செல்போன் மூலமாக டவுன்லோட் செய்து படிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆசிரியர்களுக்கு ‘பயோமெட்ரிக்’ முறையில் வருகை பதிவு செயல்படுத்தபட உள்ளது. அதேபோல் மாணவர்களின் வருகை மற்றும் வீட்டுக்கு செல்லும் நேரங்கள் ‘பயோமெட்ரிக்’ முறையில் குறுஞ்செய்தியாக பெற்றோர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு கொண்டுவரப்படும் புதிய பாடத்திட்டம் 12–ம் வகுப்பு முடித்த உடனேயே மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாடத்திட்டத்தில் 12 திறன் மேம்பாட்டு பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 8–ம் வகுப்பு முதல் 11–ம் வகுப்பு வரை கொண்டு வரப்பட்டுள்ள பாடத்திட்டங்கள் மத்திய அரசால் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை எளிதில் சந்திக்கின்ற வகையில் பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கல்வித்துறையில் மற்ற மாநிலங்கள் வியக்கதக்க வகையில் பல்வேறு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதம் இறுத்திக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்புகள் கொண்டு வரப்படும். அதேபோல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டங்களும் கணினிமயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் டிசம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவேற்றப்படும். மாணவர்களுக்கு சைக்கிள் கிடைக்கவில்லை என நினைக்க வேண்டாம் வரும் டிசம்பர் மாதத்திற்குள்ள சைக்கிள் வழங்கப்படும். மேலும் வரும் ஜனவரி மாத இறுத்திக்குள் 11 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கலெக்டர் ராமன், திருப்பத்தூர் சப்–கலெக்டர் பிரியங்கா, முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், நகர செயலாளர் சதாசிவம், பள்ளியின் இணை செயலாளர் சம்பந்தன், மூத்த உறுப்பினர்கள் பிரகாசம், மாணிக்கவாசம், சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் ஜி.குமரேசன் நன்றி கூறினார்.