ஆரணியில் டியூசனுக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ‘போக்சோ’ சட்டத்தில் வாலிபர் கைது
டியூசனுக்கு வந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆரணி,
ஆரணியை அடுத்த கஸ்தாம்பாடியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27). இவர், 5-ம் வகுப்புக்கு கீழ் படிக்கும் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினரின் 5 வயது மகள் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த சிறுமி மகேந்திரனிடம் தினமும் சென்று டியூசன் படித்து வந்தாள்.
அப்போது மகேந்திரன், சிறுமி என்றும் பார்க்காமல் அவளை கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது உள்பட பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது எல்லை மீறி போகவே சிறுமி தனது தாயாரிடம் நான் இனிமேல் டியூசனுக்கு போகமாட்டேன் என கூறியுள்ளாள். விசாரித்தபோது மகேந்திரன், தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது.
இதனையடுத்து மகேந்திரன் மீது சிறுமியின் தாயார் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மகேந்திரன் மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், “குழந்தைகள் கூறும் குறைகளை கவனமுடன் பெற்றோர் கேட்க வேண்டும். இதுபோன்ற தொந்தரவுகள் குறித்து தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் கூறி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்” என்றனர்.
Related Tags :
Next Story