மத்தூர் அருகே குளிக்க சென்றபோது கல்குவாரி குட்டையில் மூழ்கி அண்ணன்-தம்பி பரிதாப சாவு


மத்தூர் அருகே குளிக்க சென்றபோது கல்குவாரி குட்டையில் மூழ்கி அண்ணன்-தம்பி பரிதாப சாவு
x
தினத்தந்தி 11 Nov 2018 11:15 PM GMT (Updated: 11 Nov 2018 5:20 PM GMT)

மத்தூர் அருகே குளிக்க சென்றபோது கல்குவாரி குட்டையில் மூழ்கி அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.

மத்தூர்,

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் அருகே உள்ளது என்.மோட்டூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் செல்வி. விவசாய கூலித்தொழிலாளி. இவரது கணவர் வீரராகவன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். செல்விக்கு தங்கத்துரை (வயது21), அறிவுத்துரை (19), அருண் குமார் (17) ஆகிய 3 மகன்கள் இருந்தனர்.

இதில் தங்கத்துரை கூலி வேலை செய்து வருகிறார். அறிவுத்துரை கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். அருண்குமார் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அறிவுத்துரையும், அவரது தம்பி அருண்குமாரும் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள நாகம்பட்டி போயர் கொட்டாய் என்ற கிராமத்திற்கு ஓட்டிச் சென்றனர்.

அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பயன்பாடற்ற கல்குவாரி குட்டை பகுதிக்கு சென்றனர். அங்கு குட்டையில் உள்ள தண்ணீரில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் குளிப்பதற்காகவும், துணிகள் துவைப்பதற்காகவும் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற அருண்குமார் அந்த குட்டையில் இறங்கி குளித்தார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்ற போது திடீரென தண்ணீரில் மூழ்கினார். தனது கண் முன்பே தம்பி அருண்குமார் தண்ணீரில் மூழ்குவதை கண்ட அறிவுத்துரை அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற குட்டையில் குதித்தார். இதில் அவரும் தண்ணீரில் மூழ்கினார். அண்ணன்-தம்பி 2 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர்.

அதற்குள் அருண்குமார் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். அறிவுத்துரையை மீட்க முடியவில்லை. இதையடுத்து பொதுமக்கள் அருண்குமாரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குட்டையில் இறங்கி அறிவுத்துரையை தேடினார்கள். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அறிவுத்துரையின் உடலும் மீட்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவர்களின் தாய் செல்வி மற்றும் உறவினர்கள் அங்கு பதறி அடித்தபடி வந்தனர். அவர்கள் அறிவுத்துரை, அருண்குமார் ஆகிய 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த மத்தூர் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்தூர் அருகே கல்குவாரியில் உள்ள குட்டையில் மூழ்கி அண்ணன்-தம்பி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story