பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சாவு: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக சாலைமறியல் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் நேற்று 2-வது நாளாக சாலைமறியல் போராட்டம் நடத்தினர். கலெக்டர் மலர்விழி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சமரசம் ஏற்பட்டது.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்த அந்த மாணவி கடந்த 5-ந்தேதி தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தார். அன்று இயற்கை உபாதைக்காக புதர்கள் அடர்ந்த பகுதிக்கு மாணவி சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ் (வயது 22), சதீஷ் (22) ஆகிய 2 பேர் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன்பின் தடுமாறியபடி வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நடந்த கொடுமை தொடர்பாக தாயாரிடம் கூறி கதறி அழுதார்.
அந்த மாணவிக்கு அரூர் மற்றும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாணவி தர்மபுரி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று முன்தினம் இறந்தார்.
இதுபற்றி அறிந்ததும் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை கைது செய்யக்கோரி மலைவாழ் மக்கள் சங்க தலைவர் ராமசாமி தலைமையில் மாணவியின் கிராமத்தில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் இரவும் தொடர்ந்து நடந்தது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவியின் உறவினர்கள் கூறும்போது, மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான புகார் மீது போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம், என்று தெரிவித்தனர். இதனால் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை நேற்று முன்தினம் நடைபெறவில்லை.
இதற்கிடையே மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் நேற்று முன்தினம் இரவு சாலையிலேயே சமைத்து சாப்பிட்டனர். பின்னர் அங்கேயே படுத்து தூங்கினர். நேற்று காலையில் 2-வது நாளாக சாலைமறியல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மலைப்பகுதியைச் சேர்ந்த சுமார் 24 கிராம மக்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
மாணவியின் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம் நடந்ததை அறிந்ததும் நேற்று மதியம் 12 மணியளவில் கலெக்டர் மலர்விழி அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும், தாமதமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்க வேண்டும், ஆதிதிராவிடர்-பழங்குடியினர் சட்டப்பிரிவின் கீழ் வழக்கை விசாரிக்க வேண்டும், மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், பிரேத பரிசோதனை 2 சிறப்பு டாக்டர்களை கொண்டு நடத்த வேண்டும், பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும், மாணவியின் வாக்குமூலம் மாற்றப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடத்த வேண்டும், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பகத்துக்கு அனுப்பியது ஏன்? உடனடியாக உரிய சிகிச்சை அளிக்காதது ஏன்? இதற்கு காரணமானவர்கள் யார்? என்பதை கண்டறிந்து விசாரணை நடத்த வேண்டும், அரசு மருத்துவமனையில் மாணவிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதா? மாணவியின் மரணத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும், இந்த விவகாரத்தில் விதிமுறைகள் மீறி செயல்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
இதில் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். அப்போது அவர், மாணவி வீட்டில் உடனடியாக தனிநபர் கழிவறை கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை 48 மணிநேரத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், மற்ற கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story