சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் பக்தர்கள் குவிந்தனர்


சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 12 Nov 2018 3:30 AM IST (Updated: 11 Nov 2018 11:34 PM IST)
t-max-icont-min-icon

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நாளை நடக்கிறது. இதை காண்பதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூர், 

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நாளை நடக்கிறது. இதை காண்பதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கந்தசஷ்டி திருவிழா

முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோவிலில் திரளான பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் தங்கி விரதம் கடைபிடித்து வருகின்றனர்.

விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது. மாலையில், திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

தங்க ரதத்தில் பவனி

விழாவின் 4-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலையில் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்ததும், யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு மஞ்சள், இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, மீண்டும் கோவில் சேர்ந்தார்.

நாளை சூரசம்ஹாரம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும் அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாய அபிஷேகம் நடக்கிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருக்கல்யாணம்

7-ம் திருநாளான நாளை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருள்கிறார். மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினமும் கோவில் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் படி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Next Story