தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிறுவனர் தின விழா குருமூர்த்தி பங்கேற்பு
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிறுவனர் தின விழா நேற்று நடந்தது. இதில் குருமூர்த்தி கலந்து கொண்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிறுவனர் தின விழா நேற்று நடந்தது. இதில் குருமூர்த்தி கலந்து கொண்டார்.
நிறுவனர் தின விழா
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 97-வது நிறுவனர் தின விழா நேற்று மாலை தூத்துக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. வங்கி தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.ராமமூர்த்தி, முன்னாள் நிர்வாக இயக்குனர் நாகேந்திர மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கியின் கடன்துறை பொது மேலாளர் ரவீந்திரன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவல் முறையல்லா இயக்குனர் எஸ்.குருமூர்த்தி கலந்து கொண்டு, மல்டி கரன்சி டிராவல் கார்டு உள்ளிட்ட புதிய திட்டங்களை அறிமுகம் செய்தும், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஊழியர்களின் குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குடும்பங்கள்
அரசின் உதவி இல்லாமல் வெளிநாட்டின் முதலீடு இல்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி பெற்று உள்ளது. நம் நாட்டின் முழு பலமே குடும்பங்கள்தான். குடும்பங்கள் மூலம் தான் நாட்டின் பொருளாதாரமே நிலைத்து நிற்கிறது என்பதை கடந்த 20 ஆண்டுகால ஆராய்ச்சியில் உணர்ந்து உள்ளேன்.
நாட்டின் பொருளாதார வளத்துக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கிய காரணமே சேமிக்கும் தன்மைதான். நமது நாட்டில் அந்தந்த குடும்பங்களுக்கு என்று ஒரு பொறுப்பு உள்ளது. நமது நாட்டில் அரசுக்கு இல்லாத பொறுப்புகள் தனிபட்ட குடும்பங்களுக்கு உள்ளது.
இந்தியாவில் இருக்கும் பொருளாதாரத்தின் அடிப்படை பலம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. வங்கி என்றாலே சேமிப்பு என்று அர்த்தம். ஆனால் உலகில் இன்றைய காலகட்டத்தில் வங்கிகளின் தோற்றத்துக்கும் சேமிப்புக்கும் சம்பந்தமே கிடையாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசாங்கம் இல்லையென்றால், அந்த நாடே இல்லை. ஆனால் நமது நாட்டை பொறுத்தவரை அரசாங்கம் இல்லையென்றாலும் நமது நாடு இருக்கும். நமது நாட்டில் 6.7 லட்சம் நகரங்களும், கிராமங்களும் உள்ளன. ஆனால் வெறும் 12 ஆயிரத்து 800 போலீஸ் நிலையங்கள் மட்டுமே உள்ளன. அதற்கு காரணம் நமது வாழ்வியல் முறைதான். அதில் ஒரு தத்துவம் உள்ளது. பெரியோருக்கு மரியாதை, பெண்களுக்கு மரியாதை என படிக்காதவர்களுக்கும் வாழ்க்கையின் தத்துவம் தெரியும். உலகில் குற்றம் குறைவாக நடப்பது நமது நாட்டில்தான்.
பொறுப்புடன் செயல்பட்டால்...
நமது நாட்டின் வாழ்க்கை முறையை புரிந்து கொண்டு அதற்கான கொள்கைகளை நிர்ணயிக்கும் ஒரு சிந்தனை தேவை. வெளிநாட்டின் முறைகள், சிந்தனை, வாழ்க்கை முறையை வைத்து நாட்டின் பொருளாதார கொள்கையையும், வங்கி கொள்கையையும் வகுத்தால் குழப்பம் இருக்கும். சேமிப்பை வளர்க்கும் தன்மை உள்ள வங்கிதான் நிலைத்து நிற்கும். தனியார் வங்கிகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு தனி இடம் உண்டு. இந்த வங்கிக்கு பரினாம வளர்ச்சி தானாக ஏற்படும். எனவே வங்கியின் வளர்ச்சிக்கு சிறிய குழு அமைத்து பலரின் கருத்துக்களை கேட்டறிந்து பொறுப்புடன் செயல்பட்டால் மற்ற வங்கிகளுக்கு உதாரணமாக மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் வங்கியின் இயக்குனர்கள் எஸ்.ஆர்.அசோக், பி.சி.ஜி.அசோக்குமார், எழில்ஜோதி, கோபால், கேசவமூர்த்தி, நாகராஜன், நிரஞ்சன்கனி, சிவகாமி, சிதம்பரநாதன், விஜயதுரை, முன்னாள் இயக்குனர்கள் சி.எஸ்.ராஜேந்திரன், வி.வி.டி.என்.விக்ரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மனிதவள மேம்பாட்டு துறை பொதுமேலாளர் சூரியராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story