சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா அறிவிப்பு
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றப்படுகிறது.
தூத்துக்குடி,
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கந்தசஷ்டி விழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. திருச்செந்தூர் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மார்க்கமாக வரும் தனியார் சிறு ரக வாகனங்கள் வீரபாண்டியன்பட்டினம் அருகில் உள்ள ஜே.ஜே. நகர் தற்காலிக வாகன நிறுத்தும் இடத்திலும், கனரக வாகனங்கள் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஜே.ஜே. நகர் வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து பக்தர்கள் நேரடியாக கோவில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலத்தின் வழியாக டி.பி.ரோடு வந்து தாலுகா போலீஸ் நிலையம் முன்புறமாக வந்து கோவிலுக்கு செல்ல பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை
நெல்லையில் இருந்து வரும் வாகனங்கள் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் உள்ள குமாரபுரம் இசக்கியம்மன் கோவில் அருகில் தற்காலிக வாகன நிறுத்துமிடத்திலும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி எதிர்புறம், வியாபாரிகள் சங்க காலி மனை, அன்பு நகர், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி குடியிருப்பு அருகில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வள்ளியூர், சாத்தான்குளம் மார்க்கத்தில் இருந்து வரும் தனியார் வாகனங்கள் பரமன்குறிச்சி சாலையில் இந்திய உணவுக் கழகம் அருகில் உள்ள தற்காலிக வாகனம் நிறுத்தும் இடத்திலும், கன்னியாகுமரி, உவரி மார்க்கத்தில் இருந்து வரும் தனியார் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமுள்ள வேலவன் நகர் தற்காலிக வாகன நிறுத்தும் இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை நேரடியாகவும், கண்காணிப்பு கேமரா மூலமாகவும் கண்காணித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பஸ்கள்
தூத்துக்குடி மார்க்கத்தில் இருந்து வரும் அரசு பஸ்கள் ஆதித்தனார் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்திலும், நெல்லை மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் நெல்லை ரோட்டில் உள்ள சுடலை கோவில் முன்பு அமைந்துள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்திலும், கன்னியாகுமரி, உவரி மார்க்கத்தில் இருந்து வரும் அரசு பஸ்கள் முருகாமடம் சந்திப்பு அருகில் உள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்திலும், சாத்தான்குளம் மார்க்கத்தில் இருந்து வரும் அரசு பஸ்கள் முருகா மடம் அருகில் உள்ள இந்திய உணவுக்கழக குடோன் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கோவில் நிர்வாகத்தால் வழங்கப்படும் பச்சை நிற வாகன அட்டை வைத்திருப்பவர்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, அமலி நகர் சந்திப்பு, நவாப்பழ சாலை வழியாக வாகனங்களை நாழிக்கிணறு மற்றும் அய்யா வழிக்கோவில் அருகில் அமைந்துள்ள வாகன நிறுத்தத்திலும் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேற்படி வாகன அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் நாளை மதியம் 1 மணிக்குள் வர வேண்டும். 1 மணிக்கு பின்னர் வரக்கூடிய அனுமதிச் சீட்டுடைய வாகனங்கள் மேற்படி நிறுத்தத்திற்கு வர அனுமதி மறுக்கப்படுகிறது. அதன் பின்னர் பச்சை நிற அனுமதி சீட்டுடன் வரும் வாகனங்கள் தற்காலிக வாகன நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்த முடியும்.
3,200 போலீசார்
விழா பாதுகாப்புக்காக 3 ஆயிரத்து 200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். திருச்செந்தூர் நகர் முழுவதும் 10 கண்காணிப்பு கோபுரங்கள், 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. கடலில் 6 பைபர் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. கடலில் குளிப்பவர்கள் ஒளிரும் விளக்குகளுடன் அமைக்கப்பட்டு உள்ள மிதவைகள் போடப்பட்டு உள்ள பகுதியை தாண்டிச் சென்று குளிக்க அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story