தரவையில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு


தரவையில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 12 Nov 2018 4:00 AM IST (Updated: 11 Nov 2018 11:54 PM IST)
t-max-icont-min-icon

மண்டபம் அருகே தரவை பகுதியில் பறவைகள் அதிக அளவில் வருகை தரும் நிலையில் அங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக உச்சிப்புளி, பனைக்குளம், பெருங்குளம், தாமரைக்குளம், புதுமடம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. தொடர் மழையால் மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உச்சிப்புளி அருகே புதுமடம் முதல் மானாங்குடி, நொச்சியூரணி கிராமம் வரையிலும் உள்ள தரவை பகுதிகள் அனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் கடல் போல் காட்சியளித்து வருகின்றன.

இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகவே வறண்டு போய் காட்சியளித்த தரவை பகுதிகளில் நீர் நிரம்பி உள்ளதால் நாரை, கறுப்பு அரிவாள் மூக்கன், நீர்க்காகம், வெள்ளை கொக்குகள், செங்கால் நாரைகள் உள்ளிட்ட பறவைகளும், வெளிநாட்டு பறவைகளும் அதிக அளவில் அங்கு முகாமிட்டுள்ளன. அதிலும் மானாங்குடி ஊருணியில் நெடுங்கால் உள்ளான் பறவைகள் இரை தேட குவிந்துள்ளன. பறவைகள் வருகையையொட்டி அவற்றை காண ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்த வண்ணம் உள்ளனர். நீர்நிலைகளில் குவிந்துள்ள உள்ளான் உள்ளிட்ட பல வகையான பறவைகளையும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதற்கிடையில் தற்போது ஊருணிகளில் நிற்கும் பறவைகளை மர்ம ஆசாமிகள் வேட்டையாடி வருவதாக கூறப்படுகின்றது. புதுமடம் முதல் நொச்சியூரணி வரையிலும் உள்ள தரவை பகுதிகளில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தற்போது நீர்நிலைகளை நாடி வரும் பறவைகளை வேட்யை£டும் கும்பல் அதிகரித்து வருகிறது. எனவே பறவைகளை வேட்டையாடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தரவை பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story