சிதம்பரத்தில்: பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவி பலி - குரூப்-2 தேர்வு எழுதிவிட்டு காதலனுடன் சென்றபோது பரிதாபம்


சிதம்பரத்தில்: பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவி பலி - குரூப்-2 தேர்வு எழுதிவிட்டு காதலனுடன் சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 12 Nov 2018 3:15 AM IST (Updated: 12 Nov 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியானார். குரூப்-2 தேர்வு எழுதிவிட்டு காதலனுடன் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகள் பார்கவி(வயது 22). இவர், சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரு மகன் ராஜதுரை(24). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் பணியாற்றி வருகிறார்.

பார்கவியும், ராஜதுரையும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி, தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. ஆனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய அவர்கள், பார்கவி, கல்வியியல் கல்லூரி படிப்பை முடித்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த காதல் ஜோடியான இருவரும், தினமும் கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிதம்பரத்துக்கு வந்து சென்றனர்.

இதனிடையே டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-2 தேர்வுக்கு பார்கவி விண்ணப்பித்திருந்தார். இந்த தேர்வு எழுதுவதற்காக அவருக்கு, சிதம்பரம் பி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் குரூப்-2 தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்த தேர்வை எழுதுவதற்காக நேற்று காலையில் பார்கவியை, ராஜதுரை தனது மோட்டார் சைக்கிளில் பி.முட்லூர் அரசு கலைக்கல்லூரிக்கு அழைத்து வந்தார். மதியம் 1 மணிக்கு தேர்வு முடிந்ததும் ராஜதுரை, பார்கவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சிதம்பரம் நோக்கி புறப்பட்டார்.

சிதம்பரம் வேணுகோபால்பிள்ளை தெருவில் சென்றபோது கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ், அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். அந்த சமயத்தில் அந்த பஸ்சின் பின்சக்கரம் பார்கவியின் தலையில் ஏறி, இறங்கியது. இதில் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜதுரை காயங்களுடன் உயிர் தப்பினார். பார்கவியின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது காண்போரின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீசார் விரைந்து வந்து பார்கவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ராஜதுரை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story