மானாமதுரை இடைதேர்தல் தி.மு.க. சார்பில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை


மானாமதுரை இடைதேர்தல் தி.மு.க. சார்பில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 11 Nov 2018 11:00 PM GMT (Updated: 11 Nov 2018 6:40 PM GMT)

மானாமதுரை சட்டமன்ற இடைதேர்தலில் தி.மு.க. உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை,

மானாமதுரை தி.மு.க. தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் எம்.எல்.ஏ. பெரியகருப்பன் தலமையில் நடைபெற்றது. இதில் இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இதில் தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மாவட்ட மேலிட பார்வையாளருமான பொன்முத்துராமலிங்கம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். பின்னர் நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை கூறலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அப்போது நிர்வாகி தூதை ஆறுமுகம் என்பவர், மானாமதுரையில் நடைபெற்ற கடைசி 2 தேர்தல்களிலும், வெளியூரில் இருந்து ஆட்களை வேட்பாளர்களாக நிறுத்தியதால் தான் நாமக்கு தோல்வி ஏற்பட்டது. எனவே இந்த இடைத்தேர்தலில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். நான் 3 முறை சீட் கேட்டும் கொடுக்கவில்லை. கட்சிக்காக உழைத்து கொண்டிருக்கும் உள்ளூர் நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்க வேண்டும். அவர்களை தான் தி.மு.க. வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் இந்த கூட்டம் வேட்பாளர் தேர்வு செய்யும் கூட்டம் இல்லை. மானாமதுரை தொகுதி பொறுப்பாளர் கூட்டம். வேட்பாளர் தேர்வை தலைமை கழகம் தான் முடிவு செய்யும். இங்கு கூட்டணி கட்சி வேட்பாளரோ அல்லது தி.மு.க. சார்பில் யார் நிறுத்தப்பட்டாலும் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டியது நமது கடமை என்றார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், இளையான்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன், மானாமதுரை ஒன்றிய செயலாளர்கள் ராஜாமணி, அண்ணாதுரை, நகர செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட பொது குழு உறுப்பினர் ராஜாங்கம், இடைகாட்டூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், நகர் பொருளாளர் பாலசுந்தரம், மாரிக்கண்ணு, அழகுசுந்தரம், முத்துசாமி, தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகள் சதீஸ்குமார், சந்துரு உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story