தேவகோட்டை அருகே டிராக்டரை மீட்ட விவசாயிகள்


தேவகோட்டை அருகே டிராக்டரை மீட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:15 PM GMT (Updated: 11 Nov 2018 6:40 PM GMT)

தேவகோட்டை அருகே வெளியாட்கள் கைப்பற்றி சென்ற டிராக்டரை விவசாயிகள் மீட்டு கொண்டு வந்தனர்.

தேவகோட்டை,

பருவமழை பொய்த்து விட்டதால் கடந்த 4 ஆண்டுகளாக மழை மறை பிரதேசமாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மாறி, கடும் வறட்சிக்கு உள்ளாகியுள்ளன. இந்தநிலையில் பெரும் கஷ்டத்திலும் விவசாயிகள் அரசு வழங்கும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தொடர்ந்து நஷ்டங்களை தாங்கிக்கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் பயிர் காப்பீட்டு தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் பலன் கிடைப்பது அரிதாக உள்ளது.

இந்தநிலையில் விவசாயிகள் பல்வேறு நிலைகளில் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் மிகவும் சிரமப்படுவதாகவும், குறிப்பாக விவசாய டிராக்டர் கடன் வாங்கியவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்த முடியாமல் அவதி அடைவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:– டிராக்டர் கடனை வசூலிக்க சிலர் வெளியாட்களுடன் கிராமங்களில் படையெடுத்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க டிராக்டர் கடன் வாங்கியவர்கள் வாகனங்களை வேறு பகுதிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

சமீபத்தில் தேவகோட்டை அருகே முப்பையூர் பகுதியில் வெளியாட்கள் வந்து டிராக்டரை கைப்பற்றி சென்றது அந்த பகுதி விவசாயிகளுக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, தேவகோட்டை அருகே வெளியாட்களை மடக்கி, அவர்களிடம் இருந்து டிராக்டரை மீட்டுக் கொண்டு வந்தனர்.

விவசாயிகள் நிலத்தை அடமானம் வைத்துதான் கடன் வாங்குகின்றனர். நிலத்தின் மதிப்பு இன்று பல மடங்கு கூடிவிட்டதால் அதை வைத்து கடனை ஈடு செய்து கொள்ள முடியும். நிலைமை இவ்வாறு இருக்க முறையற்ற நடவடிக்கை எடுப்பது வன்மையாக கண்டித்தக்கது. இனி இதுபோல் டிராக்டரை பறிமுதல் செய்ய வந்தால், விவசாயிகள் ஒன்றிணைந்து தடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story