மாவட்டம் முழுவதும், 69 மையங்களில் குரூப்-2 தேர்வை 14,452 பேர் எழுதினர்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று குரூப்-2 தேர்வை 69 மையங்களில் 14,452 பேர் எழுதினர். இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்த 4,524 பேர் தேர்வு எழுத வரவில்லை.
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் குரூப்-2-ல் அடங்கி உள்ள பல்வேறு பதவிகளுக்கான போட்டித்தேர்வு நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் இதற்காக நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு என 3 தாலுகாவில் மொத்தம் 69 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குரூப் -2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 18,976 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்து இருந்தனர். ஆனால் 4,524 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 14,452 பேர் மட்டுமே தேர்வை எழுதினர்.
இத்தேர்வு கண்காணிப்பு பணியில் 69 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் 69 ஆய்வு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும் இப்பணிக்காக துணை கலெக்டர், துணை இயக்குனர் நிலையில் 9 பறக்கும் படை அலுவலர்களும், துணை தாசில்தார்கள் தலைமையில் 15 நடமாடும் குழுவினர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் ஒவ்வொரு மையமாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் தேர்வு கூடங்களில் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்ய 46 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தரைத்தளத்திலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பஸ்வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற மின் சாதன பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story