‘கஜா’ புயல் எதிரொலி: கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
‘கஜா’ புயல் எதிரொலியால் கடலூர் துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலூர் முதுநகர்,
அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் வருகிற 15-ந் தேதி கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றும், அந்த சமயத்தில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று காலையில் தெரிவித்தது. மேலும் அன்றை தினத்தில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது எனவும், ஏற்கனவே ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் உத்தரவிட்டனர்.
புயலால் கடலூர் துறைமுகத்தில் நேற்று முன்தினம் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் ‘கஜா’ புயல் நேற்று மாலையில் சென்னைக்கு கிழக்கே 860 கிலோ மீட்டர் தொலைமையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக நேற்று மதியம் 2 மணிக்கு கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் நேற்று காலையில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களும் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் கடலூர் துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசை படகுகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. தாழங்குடா கடற்கரையோரத்திலும் மீனவர்கள், தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுகம் நேற்று ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story