டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு: மாவட்டம் முழுவதும் 11 ஆயிரத்து 752 பேர் எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. இதை 11 ஆயிரத்து 752 பேர் எழுதினார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. இதை 11 ஆயிரத்து 752 பேர் எழுதினார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சார்பதிவாளர் நிலை-2, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், மாநகராட்சி ஆணையாளர் நிலை-2, தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர் உள்ளிட்ட 1199 பணிகளுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான குரூப்-2 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் குரூப்-2 தேர்வு நடந்தது. இந்த பகுதிகளில் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 15 ஆயிரத்து 621 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மொத்தம் 57 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
11,752 பேர்
நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை கண்காணிக்க 10 கண்காணிப்பு குழுக்கள், துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர், ஆய்வு அலுவலர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த தேர்வு மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்வை தூத்துக்குடியில் 5 ஆயிரத்து 735 பேரும், கோவில்பட்டியில் 3 ஆயிரத்து 718 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 606 பேரும், திருச்செந்தூரில் 1,693 பேரும் ஆக மொத்தம் 11 ஆயிரத்து 752 பேர் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 869 பேர் தேர்வு எழுதவில்லை.
ஆய்வு
தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பல்வேறு மையங்களையும் பார்வையிட்டார். தேர்வையொட்டி தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. டி.என்.பி.எஸ்.சி. தேர்வையொட்டி தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story