விருத்தாசலம் அருகே: மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பலி
விருத்தாசலம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஆனந்தகுடியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் உதயகுமார் (வயது 9). இவன் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயகுமார் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதையடுத்து பெற்றோர் அவனை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு உதயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உதயகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இருப்பினும் உதயகுமார் டெங்கு காய்ச்சலால் இறந்தானா? அல்லது பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தானா? என்பது குறித்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஆனந்தகுடியை சேர்ந்த லோகநாதன்(24), கிருஷ்ணராஜ்(29), பூமாலை(22), அசலாம்பாள்(50), கருணாநிதி(51), செல்வி(30), ஐஸ்வர்யா(7), பத்ராசலம்(70), மிதுலா(5), கனிமொழி(35), கவுதமன்(13) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, ஸ்ரீமுஷ்ணம் பகுதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story