தூத்துக்குடியில் இருந்து இருக்கன்குடி வந்து அண்ணியுடன் தொழிலாளி தற்கொலை
தூத்துக்குடி பகுதியை சேர்ந்த தொழிலாளி அண்ணியுடன் இருக்கன்குடிக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் இருவரும் இந்த துயர முடிவை தேடிக்கொண்டதாக கூறப்படுகிறது.
சாத்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்த முத்து என்பவரது மகன் பாஸ்கர் (வயது 40). தொழிலாளி. இவரது அண்ணன் சுந்தர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த நிலையில் அவரது மனைவி உஷாவுடன் (35) வசித்து வந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து நாலுமாவடி பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர். அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அதிக அளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி கட்டமுடியாமல் இருவரும் திணறியுள்ளனர். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில் இருவரும் ஊரை விட்டு சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடிக்கு நேற்று வந்துள்ளனர்.
இருக்கன்குடியில் சாமிகும்பிட்டு விட்டு அங்குள்ள அணைக்கட்டு பகுதிக்கு சென்று இருவரும் ஒன்றாக விஷம் குடித்துள்ளனர். இருவரும் மயங்கி கிடந்த நிலையில் அந்தப்பக்கமாக சென்றவர்கள் இதைப்பார்த்து இருவரையும் ஆட்டோவில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உஷா உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாஸ்கர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணியுடன் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.