விழுப்புரம் அருகே லாரி டிரைவர் கொலை: ‘அண்ணன் சாவுக்கு காரணமாக இருந்ததால் கொன்றேன்’- கைதான வாலிபர் வாக்குமூலம்
அண்ணன் சாவுக்கு காரணமாக இருந்ததால் நண்பர்களோடு சேர்ந்து லாரி டிரைவரை கொலை செய்தேன் என்று கைதான வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே பில்லூர் ராமநாதபுரம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் உலகநாதன். இவருடைய மகன் கந்தன் (வயது 30). லாரி டிரைவர். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. கந்தன் டிரைவர் வேலை இல்லாத நேரத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த 9-ந்தேதி மாலை திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூரில் நடந்த நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று வருவதாக கூறி கந்தன் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதற்கிடையே நேற்று முன்தினம் திருப்பாச்சனூர் மலட்டாற்றில் இருந்து பில்லூர் செல்லும் மண் பாதையில் கந்தன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலில் வெட்டுக்காயங்களும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் இருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் கொலை செய்தது தெரியவந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து இறந்த கந்தனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தனை யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் வளவனூர் தொட்டியை சேர்ந்த வேலு(26), வி.மருதூர் முருகன் மகன் சூர்யா என்கிற சுந்தரமூர்த்தி(27), ராமநாதபுரம் ஆறுமுகம் மகன் சுரேஷ் என்கிற சகாதேவன்(27), ஆனங்கூரை சேர்ந்த வடிவேல் மகன் கார்த்தி(19) ஆகிய 4 பேரும் கந்தனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்கள் போலீசாருக்கு பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதில் முக்கிய குற்றவாளியான வேலு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கோவில் திருவிழாவின்போது எங்களுக்கும், கந்தன் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் எனது அண்ணன் நாகராஜை அவர்கள் சரமாரியாக தாக்கினார்கள். மேலும் அவரது காலில் கல்லால் அடித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு புண்ணாகி விட்டது. பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் சரியாகவில்லை. இதையடுத்து காயமடைந்த காலை டாக்டர்கள் அகற்றி விட்டனர்.
ஒரு காலை இழந்த மனவேதனையில் நாகராஜ் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கி இருந்தார். இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்னுடைய அண்ணன் சாவுக்கு கந்தன் தான் முக்கிய காரணம். ஆகவே அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். எனது அண்ணன் சாவுக்கு பிறகு ராமநாதபுரத்தில் இருந்து வெளியேறி வளவனூர் தொட்டி பகுதியில் குடியேறினேன்.
அங்கு ஆட்டோ ஓட்டி வந்தேன். இருப்பினும் கந்தனின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தேன். அப்போது கந்தன் தனியாக அரசூருக்கு சென்று வீடு திரும்புவதாக தகவல் வந்தது. நான் நினைத்து போல் அவர் தனியாக வருவதை அறிந்ததும், என்னுடன் ஆட்டோ ஓட்டி வரும் நண்பர்கள் 3 பேரை அழைத்துக்கொண்டு திருப்பாச்சனூர் சாலையில் 2 மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம்.
அவர் தப்பித்துச்செல்ல முடியாத அளவுக்கு, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியான திருப்பாச்சனூர் மலட்டாறு பகுதியில் சென்றபோது பின்பக்கமாக அரிவாளால் வெட்டினோம். இதில் கந்தன் கீழே விழுந்ததும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் வேலு கூறியுள்ளார்.
இதையடுத்து கைதான 4 பேரிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள், அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைதான 4 பேரும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story