ஆரோவில் அருகே பயங்கரம்: முந்திரி தோப்பில் ரவுடி வெட்டிக் கொலை - கூட்டாக மது குடித்தபோது மோதலா?
ஆரோவில் அருகே முந்திரி தோப்பில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கூட்டாக சேர்ந்து மது குடித்தபோது ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
வானூர்,
ஆரோவில் அருகே பிள்ளைச்சாவடியில் உள்ள ஒரு முந்திரிதோப்பில் நேற்று மதியம் 3 மணியளவில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
முந்திரிதோப்பில் கழுத்து, தலை, முதுகு உள்பட உடலில் 5 இடங்களில் பயங்கரமாக வெட்டப்பட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொலை நடந்த இடத்தை மோப்பம் பிடித்த அது பிள்ளைச்சாவடி சாலை வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், பொம்மையார்பாளையம் ஓடைத்தெருவை சேர்ந்த ராஜேஷ் என்கிற உல்லாஸ் (வயது 24) என்பது தெரியவந்தது. இவர் குயிலாப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டனின் கூட்டாளி ஆவார். இவர் மீது ஆரோவில், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையங்களில் அடிதடி, கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று மதியம் முந்திரிதோப்பில் ரவுடிகள் கூட்டாக அமர்ந்து மது குடித்தபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ராஜேஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த பயங்கர கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story