கொசு புழு கண்டறியப்பட்ட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி- பள்ளிக்கூடத்துக்கு அபராதம் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரி நடவடிக்கை


கொசு புழு கண்டறியப்பட்ட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி- பள்ளிக்கூடத்துக்கு அபராதம் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Nov 2018 4:00 AM IST (Updated: 12 Nov 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொசு புழு கண்டறியப்பட்ட பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடத்துக்கு மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரி அபராதம் விதித்தார்.

நெல்லை, 

கொசு புழு கண்டறியப்பட்ட பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடத்துக்கு மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரி அபராதம் விதித்தார்.

பேரிடர் மேலாண்மை அதிகாரி ஆய்வு

நெல்லை மாட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் ஆகியவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 57 நடமாடும் குழுக்கள் அமைத்து பல்வேறு இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பேரிடர் மேலாண்மை அதிகாரியும், வருவாய் நிர்வாக ஆணையருமான சத்திய கோபால் நேற்று நெல்லை வந்தார். அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் ஷில்பா, ஆஸ்பத்திரி டீன் கண்ணன், சுகாதார பணிகளின் துணை இயக்குனர் செந்தில்குமார், மாநகர நகர் நல அலுவலர் சதீஷ்குமார், பாளையங்கோட்டை மண்டல ஆணையாளர் அய்யப்பன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

வார்டுகள் சுத்தமாக உள்ளதா?

அரசு ஆஸ்பத்திரி வார்டுகள் சுத்தமாக உள்ளதா? தண்ணீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? உறை கிணறுகளில் கொசு புழுக்கள் இருக்கிறதா? கொசு ஒழிப்பு பணிகள் எவ்வாறு நடந்து வருகிறது? என ஆய்வு செய்தார்.

பின்னர் சத்திய கோபால், ஐகிரவுண்டில் உள்ள காந்திமதி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். பள்ளி வளாகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? தங்கும் விடுதியில் கொசு புழுக்கள் தேங்கி இருக்கிறதா? எனவும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்கு பின்னர் பேரிடர் மேலாண்மை அதிகாரி சத்திய கோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து அரசு கட்டிடங்களும் சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறோம்.

அரசு ஆஸ்பத்திரி- பள்ளிக்கு அபராதம்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒரு சில இடங்களில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், காந்திமதி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டது. அந்த பள்ளி நிர்வாகத்துக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story