கேரள தொழிலாளி கொலை: தலைமறைவான போலீஸ் அதிகாரிக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது


கேரள தொழிலாளி கொலை: தலைமறைவான போலீஸ் அதிகாரிக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2018 4:30 AM IST (Updated: 12 Nov 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

கேரள தொழிலாளி கொலை வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது செய்யப்பட்டார். திற்பரப்பு தங்கும் விடுதியில் போலீஸ் அதிகாரி தங்கி இருந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

நாகர்கோவில்,

கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை கொடுங்காவிளை பகுதியை சேர்ந்தவர் சணல்குமார் (வயது 32), பிளம்பிங் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு சணல்குமார் மூநாலுமூடு சாலையோரத்தில் உள்ள ஒரு வீட்டு முன் தனது காரை நிறுத்தி விட்டு அருகில் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது, அந்த வீட்டில் உள்ள கார் வெளியே வர முடியவில்லை. இதனால் அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த நபர், சணல்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், சணல்குமாரை தாக்கி அவரது சட்டையை பிடித்து இழுத்து சாலையில் தள்ளினார். அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் சணல்குமாரின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓட்டலில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.

அப்போது தான் சணல்குமாரை தள்ளி விட்டது நெய்யாற்றின்கரை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிக்குமார் என்பதும், தோழி வீட்டுக்கு வந்தபோது பிரச்சினையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதற்கிடையே படுகாயமடைந்த சணல்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சணல்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாறசாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனை கேள்விபட்டதும் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிக்குமார் தலைமறைவானார். அதைத் தொடர்ந்து சணல்குமாரின் உறவினர்கள் அவரின் உடலை நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஹரிக்குமாரை கைது செய்யக்கோரியும், சணல்குமாரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை கேட்டும் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த போராட்டக்காரர்கள் மறியலை ை-விட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிக்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டதுடன், அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான ஹரிக்குமார் தமிழக பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்று கருதி களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கேரள போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் திற்பரப்பில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் உரிமையாளர் ஒருவர், ஹரிக்குமாருக்கு அடைக்கலம் கொடுத்து செல்போன், சிம்கார்டு போன்றவற்றை கொடுத்து உதவிகள் செய்வதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் போலீசார் வருவதை அறிந்து ஹரிக்குமார் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். உடனே போலீசார் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக விடுதி உரிமையாளரான சதீஷ் (45) என்பவரை கைது செய்தனர்.

தொழிலாளி கொலை வழக்கில் தலைமறைவான போலீஸ் அதிகாரி திற்பரப்பில் உள்ள தங்கும் விடுதியில் இருந்ததும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டதும் கேரள-தமிழக எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story