திருமருகல் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு வாலிபர் பலி


திருமருகல் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு வாலிபர் பலி
x
தினத்தந்தி 12 Nov 2018 4:15 AM IST (Updated: 12 Nov 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி ப.கொந்தகை இந்திரா நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் ஹரிகரசுதன்(வயது24). இவருக்கு கடந்த 3-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் இவரை நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததால் அங்கிருந்து ஹரிகரசுதனை கடந்த 4-ந்தேதி தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். ஹரிகரசுதன் வைரஸ் காய்ச்சலால் இறந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் ஹரிகரசுதனின் தந்தை கலியமூர்த்தியும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஹரிகரசுதன் பன்றி காய்ச்சலால் தான் இறந்ததாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் பன்றி காய்ச்சல் பரவுவதாக அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதனால் அப்பகுதியில் திட்டச்சேரி பேரூராட்சி நிர்வாகமும், சுகாதார துறையினரும் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பிளச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற தூய்மை பணிகளை செய்தனர். 

Next Story