சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு தீவிர சிகிச்சை முதன்மை செயலாளர் தகவல்


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு தீவிர சிகிச்சை முதன்மை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 12 Nov 2018 5:00 AM IST (Updated: 12 Nov 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அரசு முதன்மை செயலாளர் அமுதா கூறினார்.

சேலம், 

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டுகள் ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வார்டுகளில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் அமுதா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர்கள், டாக்டர்கள் ஆகியோரிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து முதன்மை செயலாளர் அமுதா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள காய்ச்சல் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். டெங்கு, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளன.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் சிகிச்சைக்கு பிறகு காய்ச்சல் குணமானதும் வீடு திரும்புவார்கள். தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு நிர்வாகத்தினர் அனுப்பி வைக்க வேண்டும்.

தனியார் ஆஸ்பத்திரிகளில் 4, 5 நாட்கள் காய்ச்சலுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த பிறகு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருபவர்களை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற முன்வர வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை தடுக்க 24 நடமாடும் மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. அதிகமாக மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகள், ரெயில் நிலையங்கள், பள்ளிகள், அரசு ஆஸ்பத்திரி வளாகங்கள் கிருமி நாசினி கரைசல் கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நோய் தொற்று பரவாமல் தடுக்கப்படும்.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக காய்ச்சல் பாதிப்பு சதவீதம் குறைந்து உள்ளது. பொதுமக்கள் எந்தவித அச்சம் அடைய தேவையில்லை. குறிப்பாக ஆஸ்பத்திரிக்கு வந்து செல்பவர்கள் நோய் தொற்று ஏற்படாத வகையில் கைகளை சுத்தமாக கழுவி விட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ரோகிணி, அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story