சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலத்தில் வாகனங்கள் சோதனை ஓட்டம் 18-ந் தேதி எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்


சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலத்தில் வாகனங்கள் சோதனை ஓட்டம் 18-ந் தேதி எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 12 Nov 2018 4:45 AM IST (Updated: 12 Nov 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் வாகனங்கள் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தை வருகிற 18-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

சேலம், 

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாக்கவுண்டனூர் மற்றும் ஏ.வி.ஆர்.ரவுண்டானா ஆகிய 2 இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களை ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தற்போது அந்த மேம்பாலங்கள் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தநிலையில், சேலம்-பெங்களூரு பைபாஸ் சாலையில் சேகோசர்வ் ஆலை எதிரில் இரும்பாலைக்கு செல்லும் பிரிவு ரோட்டில் ரூ.22 கோடியில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கப்பட்ட இந்த மேம்பால பணிகள் முழுவீச்சில் நடைபெற்று தற்போது நிறைவுபெறும் தருவாயில் உள்ளது.

இதனிடையே, இந்த மேம்பாலத்தில் நேற்று முன்தினம் முதல் வாகனங்கள் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. சேலத்தில் இருந்து ஓமலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்களும், சேலம்-பெங்களூரு பைபாசில் செல்லும் வாகனங்களும் தற்போது உயர்மட்ட மேம்பாலத்தில் சென்று வருகின்றன.

பாலத்தையொட்டி உள்ள சர்வீஸ் ரோடு வழியாக சேலத்தில் இருந்து இரும்பாலை, தாரமங்கலம் செல்லும் வாகனங்களும், இரும்பாலை பகுதியில் இருந்து சேலம் வரும் வாகனங்களும் பாலத்தின் கீழ் பகுதி வழியாக சர்வீஸ் ரோட்டிற்கு வந்து சேலம் நகருக்குள் வரும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரும்பாலை பிரிவு ரோட்டில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

ஏற்கனவே சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருவாக்கவுண்டனூர் பகுதியில் ரூ.26.77 கோடியிலும், ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் குரங்குச்சாவடி வரை ரூ.86 கோடியிலும் மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் தற்போது 3-வதாக இரும்பாலை பிரிவு ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை வருகிற 18-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story