வேதாரண்யம் அருகே மீட்கப்பட்ட நிலத்தை அபகரித்த ஆசிரியர் கைது


வேதாரண்யம் அருகே மீட்கப்பட்ட நிலத்தை அபகரித்த ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2018 3:45 AM IST (Updated: 12 Nov 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தை அபகரித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோவில்பத்து கிராமம் பகுதியில் அரசு வண்டி பாதை என்ற இடத்தில் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த நாகூரான் என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டினார். இதை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த கலைராஜன்(வயது39) என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இவர் காரப்பிடாகையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வழக்கை விசாரித்த நீதிபதி, நாகூரான் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்க உத்தரவிட்டார். அதன்படி வேதாரண்யம் வருவாய்த்துறை அதிகாரிகள் நாகூரான் கட்டி இருந்த வீட்டை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இது அரசு இடம் என விளம்பர பலகை வைத்தனர்.

கைது

இந்தநிலையில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த கலைராஜன் மீட்கப்பட்ட இடத்தை அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேட்டைக்காரன் இருப்பு கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சங்கர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புறம்போக்கு இடத்தை அபகரித்த கலைராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story