பழப்பயிர், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மானியம் வேளாண்மை அதிகாரி தகவல்
பழப்பயிர், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக கோவில்பட்டி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியராஜ் தெரிவித்தார்.
கோவில்பட்டி,
பழப்பயிர், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக கோவில்பட்டி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியராஜ் தெரிவித்தார்.
கருத்தரங்கு
கோவில்பட்டியை அடுத்த பிள்ளையார்நத்தம் கிராமத்தில் ‘மானாவாரி வேளாண்மைக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை பலப்படுத்துதல்‘ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் முருகன் தலைமை தாங்கி பேசினார். மானாவாரி விவசாய திட்ட முதன்மை விஞ்ஞானி பாஸ்கர் வரவேற்று பேசினார்.
கோவில்பட்டி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியராஜ் கலந்து கொண்டு பேசுகையில், தேசிய தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பழப்பயிர் மற்றும் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டருக்கு ரூ.2 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது. பசுமைக்குடில் அமைக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.16 லட்சமும், நிழல்வலை கூடாரம் அமைக்க 1,000 சதுர மீட்டருக்கு ரூ.3 லட்சமும், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க 75 முதல் 100 சதவீதம் வரையிலும் மானியமும் வழங்கப்படுகிறது. மானாவாரி தோட்டக்கலை திட்டத்தில் சப்போட்டா, கொய்யா, சீமை இலந்தை, சீதாப்பழம் போன்ற மரக்கன்றுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது என்று கூறினார்.
இலவச மரக்கன்றுகள்
வேளாண் பொறியியல் துறை உதவி கண்காணிப்பு பொறியாளர் பழனிச்சாமி பேசுகையில், டிராக்டர், பொக்லைன் எந்திரம், கூட்டு அறுவடை எந்திரம் ஆகியவற்றை முறையே மணிக்கு ரூ.340, ரூ.860, ரூ.840 என்று வாடகைக்கு எடுத்து விவசாயிகள் பயன்படுத்தலாம். களையெடுக்கும் கருவிகளுக்கு 75 சதவீதமும், கறிவேப்பிலை, மிளகாய், முருங்கை இலை போன்றவற்றை உலர்த்தி விற்பனை செய்ய சூரிய உலர்த்தி கருவிகளுக்கு 50 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் ஊரில் பண்ணை எந்திரங்கள், கருவிகளை வாடகைக்கு விடும் மையத்தை தொடங்க ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் நெல்லை வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் நாகராஜன், கோவில்பட்டி வனச்சரகர் சிவராம், வேளாண்மை அலுவலர் செல்வமாலதி, தொழில்நுட்ப வல்லுனர் பாக்கியத்து சாலிகா, ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், ரவீந்திராச்சாரி மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உழவியல் துறை வல்லுனர் மனோகரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story