ஆலந்தூர் மண்டலத்தில் சொத்து வரியை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ஆலந்தூர் மண்டலத்தில் சொத்து வரியை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Nov 2018 1:02 AM IST (Updated: 12 Nov 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர் நகராட்சி உள்பட பல பகுதிகள், கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.

ஆலந்தூர்,

ஆலந்தூர் நகராட்சியாக இருந்தபோது விதிக்கப்பட்ட சொத்து வரியே, கடந்த 7 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 160-வது வட்டத்தில் இருந்து 167-வது வட்டம் வரை உள்ள 30 ஆயிரத்துக்கு அதிகமான குடியிருப்புகளுக்கு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டதற்கான நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

ஆனால் அதில், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட இந்த பகுதிகளுக்கு மாநகராட்சி பகுதிகளில் விதிக்கப்பட்டதுபோல் சொத்து வரியை விதிக்காமல், ஆலந்தூர் நகராட்சியாக இருந்தபோது விதிக்கப்பட்ட அதே வரியையே உயர்த்தி அறிவிக்கப்பட்டு இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள அண்ணா சாலை, மயிலாப்பூர், அடையாறு, ஆழ்வார்பேட்டை போன்ற முக்கிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் சதுர அடிக்கு விதிக்கப்படும் சொத்து வரி ரூ.1-ல் இருந்து ரூ.1.25 வரை அதிகரிக்கப்பட்டது.

ஆனால் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.25-ல் இருந்து ரூ.2.50 வரை வரி உயர்த்தப்பட்டு உள்ளது. தொழில்சார்ந்த கட்டிடங்களுக்கு பழைய மாநகராட்சியில் உள்ள பகுதிகளுக்கு ரூ.3.50 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் ஆலந்தூர் நகராட்சியாக இருந்த பகுதிகளுக்கு ரூ.7 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் தங்களுடைய பகுதிக்கு மாநகராட்சி சொத்து வரியை விதிக்காமல், பழைய வரி முறையில் உயர்த்தப்பட்டதால் குறைந்தபட்ச வரியாக ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் வரை செலுத்த வேண்டியது உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

எனவே தங்களுடைய சொத்து வரியை, மாநகராட்சி சொத்து வரியாக மாற்ற வேண்டும் என்று ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பொதுநல சங்கங்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆலந்தூர் மண்டலத்தில் சொத்து வரியை மறுசீராய்வு செய்யவேண்டும் என்று தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் ஆகியோர் மாநகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை மனு அளித்து உள்ளனர். ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள பொதுநல சங்கங்களும் சொத்து வரியை சீரமைத்து தரவேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

சொத்து வரி தொடர்பாக ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டால், இதுபற்றி சென்னை மாநகராட்சியில்தான் கேட்கவேண்டும். எங்களிடம் கேட்கக்கூடாது என்று கூறுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

வேளச்சேரி, சைதாப்பேட்டை, அடையாறு போன்ற பகுதிகளில் 600 சதுரஅடி இடத்துக்கு மாநகராட்சி சொத்து வரி ரூ.900-ம் என்றும், ஆலந்தூர் மண்டலத்தில் ரூ.2 ஆயிரமாகவும் உள்ளதால் ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரியை மாற்றி அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story