டெங்கு கொசு ஒழிப்பு பணி: வீடு, வீடாக கலெக்டர் நடராஜன் ஆய்வு
டெங்கு கொசு ஒழிப்பு பணியினை வீடு, வீடாக சென்று கலெக்டர் நடராஜன் ஆய்வு நடத்தினார்.
மதுரை,
மதுரை மாவட்டம் முழுவதும் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் நடராஜன் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி அவர் நேற்று வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி, நாடார் சந்து, வடக்கு மாசி வீதி, மேலமாசி வீதி, ராமாயண சாவடித்தெரு, வடக்கு ஆவணி மூலவீதி, சப்பாணி கோவில் தெரு, ஆதி மூலம் பிள்ளை சந்து, ஆவின் பார்க், கீழசித்திரை வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் வீடு, வீடாக சென்று தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகள் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்தார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:–
வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீட்டின் உள்ளே மற்றும் வெளியே உள்ள பகுதிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தில் கழிவுநீர் ஏதும் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வீட்டின் மாடி மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். டயர் மற்றும் தேவையற்ற பொருட்கள் சாலையோரங்களில் இல்லாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியை நன்கு தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும். தண்ணீர் பானையை மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கலெக்டர் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி, மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் தண்ணீர் வழங்கும் தானியங்கி குடிதண்ணீர் எந்திரத்தினை பரிசோதனை செய்து பார்த்தார்.