காஞ்சீபுரம் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை; 6 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை; 6 பேர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2018 3:45 AM IST (Updated: 12 Nov 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே உள்ள சதாவரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 24). இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று காலை தேவராஜ் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் பாலாற்றில் இருந்து 4 மூட்டை மணலை எடுத்து, வந்து கொண்டு இருந்தார்.

சதாவரம் வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பாபு (25) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பாபு, தேவராஜ் மோட்டார் சைக்கிளின் மீது மோதினார். இதில் தேவராஜுக்கும், பாபுவுக்கும் தகராறு ஏற்பட்டது. மேலும் தேவராஜ், பாபுவை பல்லால் கடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சென்று விட்டனர்.

இந்த நிலையில் பாபுவின் நண்பர்களான சதாவரம் பகுதியை சேர்ந்த டில்லிபாபு (25), கார்த்திக் (24), சரவணன் (23), தீனா (25), ஸ்ரீநாத் (24) ஆகியோர் சேர்ந்து தேவராஜ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில் இருந்த தேவராஜிடம் உன்னிடம் பேச வேண்டும் என்று அழைத்தனர்.

பின்னர் அவர்கள் தேவராஜிடம், ஏன் பாபுவின் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தினாய், பாபுவை ஏன் கடித்தாய் என்று மீண்டும் தகராறுக்கு இழுத்தனர். இதையொட்டி, மேலும் தகராறு மூண்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபு மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவராஜை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

உடனடியாக அந்த பகுதியில் உள்ளவர்கள் உயிருக்கு போராடிய தேவராஜை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தேவராஜ் உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி வைத்தீஸ்வரி காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தேவராஜை கொலை செய்த சதாவரம் பகுதியை சேர்ந்த பாபு, அவரது நண்பர்களான டில்லிபாபு, கார்த்திக், சரவணன், தீனா, ஸ்ரீநாத் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story