சங்ககிரி அருகே வேனை வழிமறித்து ரூ.7 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்தல் 4 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு


சங்ககிரி அருகே வேனை வழிமறித்து ரூ.7 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்தல் 4 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Nov 2018 3:45 AM IST (Updated: 12 Nov 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரி அருகே வேனை வழி மறித்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சங்ககிரி,

கோவை சுந்தர் விநாயகர் நகர், தாமஸ் தெருவை சேர்ந்தவர் பவர்லால் (வயது 35). இவரது நண்பர் மோகன்லால் (32). இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஒரு வேனில் ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி சுங்கச்சாவடி அருகே நேற்று அதிகாலை 4 மணி அளவில் வேன் வந்தது. அப்போது அவர்களை பின்தொடர்ந்து ஒரு காரில் 4 பேர் வந்தனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் திடீரென்று வேனை மறித்து பவர்லால், மோகன்லால் இருவரையும் மிரட்டி தங்கள் காரில் ஏற்றிக்கொண்டு, புறப்பட்டனர்.

பின்னர் அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் வேனை ஓட்ட, அதற்கு முன்பாக கார் சென்றது. தொடர்ந்து சங்ககிரியை அடுத்த மங்களாபாளையம் பகுதிக்கு சென்று காரை நிறுத்தினர். பின்னர் இருவரையும் மிரட்டி, காரில் இருந்த 2 பேர், வேனில் இருந்த புகையிலை பொருட்களை தங்கள் காரில் ஏற்றிக்கொண்டனர். பின்னர் பவர்லால், மோகன்லால் ஆகியோரை நடுவழியில் விட்டு, விட்டு 4 பேரும் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து 2 பேரும் சங்ககிரி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story