கஜா புயலை எதிர்கொள்ள அரசு தயார்: பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் ஷாஜகான் அறிவிப்பு


கஜா புயலை எதிர்கொள்ள அரசு தயார்: பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் ஷாஜகான் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Nov 2018 11:00 PM GMT (Updated: 11 Nov 2018 8:30 PM GMT)

கஜா புயலை எதிர்கொள்ள புதுவை அரசு தயார் நிலையில் உள்ளது; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அமைச்சர் ஷாஜகான் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

 அமைச்சர் ஷாஜகான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வங்கக்கடலில் உருவாகி உள்ள கஜா புயல் புதுச்சேரி பகுதியை வருகிற 14, 15–ந் தேதிகளில் தாக்கக்கூடும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலின் காரணமாக புதுவையில் கன மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. இந்த பேரிடர் நிகழ்வை புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் மாநில அவசர கால செயல் மையம் கூர்ந்து கவனித்து வருகிறது.

இந்த புயலை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து துறையின் கீழ் இயங்கும் பேரிடர்கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, 1077 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இந்த புயல் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் மூலமாக அனைத்து அதிகாரிகளின் செயல்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புயலையும், அதனால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் எதிர்கொள்ள புதுவை அரசு தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் அரக்கோணத்தில் இயங்கும் தேசிய பேரிடர் மீட்புக்குழு புதுவைக்கு அழைக்கப்படுவார்கள்.

புயலை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தயார் நிலைப்படுத்துவது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) எனது(ஷாஜகான்) தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே இந்த புயல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story