காரைக்கால் மாவட்டத்தில் பிராந்திய அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - கவர்னருக்கு பா.ஜ.க. வலியுறுத்தல்


காரைக்கால் மாவட்டத்தில் பிராந்திய அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - கவர்னருக்கு பா.ஜ.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:30 PM GMT (Updated: 11 Nov 2018 8:30 PM GMT)

காரைக்கால் மாவட்டத்தில் பிராந்திய அடிப்படையிலேயே ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மீனாட்சிசுந்தரம் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

காரைக்கால் மாவட்ட அரசு பள்ளிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு புதுச்சேரி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த காலியிடங்களை பிராந்திய அடிப்படையிலேயே நிரப்ப மாநில அரசுக்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி அளித்துள்ளார். இதனை பல்வேறு தரப்பினர் வரவேற்று உள்ளனர்.

ஆனால் புதுச்சேரியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் சிலர் இதனை எதிர்த்து வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக பிராந்திய இட ஒதுக்கீடு இல்லாமல் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் புதுச்சேரிக்கு பணியிடமாற்றம் கோரி சென்றுவிட்டனர். இதனால் தற்போது காரைக்காலில் பல ஆசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளது.

இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் ஆசிரியர்களை மீண்டும் பிற பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களை சேர்த்தால், அவர்கள் சொந்த பிராந்தியத்துக்கே சென்று விடுவார்கள். அரசும் அதனை செய்துவிட்டால், காரைக்காலில் மீண்டும் காலிப்பணியிடம் வந்துவிடும். எனவே, அரசு எடுத்திருக்கும் முடிவை உறுதியாக நிறைவேற்ற வேண்டும். எந்த நிர்பந்தத்துக்கும் கவர்னர் பின்வாங்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story