முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி கைது: தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் சித்தராமையா பேட்டி
முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று கூறினார்.
சிக்கமகளூரு,
முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று கூறினார்.
கனவு பலிக்காது
முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா நேற்று சிக்கமகளூருவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தான் மீண்டும் முதல்-மந்திரி அரியணையில் அமர்வேன் என்று எடியூரப்பா பகல் கனவு காண்கிறார். அவருடைய கனவு என்றைக்கும் பலிக்காது. கண்ணை மூடி ஒரு இருக்கையில் அமர்ந்தாலே தான் முதல்-மந்திரி இருக்கையில் அமர்ந்து கொண்டதாக எடியூரப்பா நினைத்துக் கொள்கிறார். அது வெறும் கனவுதான் என்பதை நாம்தான் அவருக்கு புரியவைக்க வேண்டும்.
தேவையில்லாத ஒன்று
பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மையே இல்லை. அப்படி இருக்கையில் அவர்களால் எப்படி ஆட்சி அமைக்க முடியும். கூட்டணி ஆட்சியைப் பற்றி எடியூரப்பா குறை கூறி வருகிறார். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி எப்படி நடைபெற்று வருகிறது என்பதை மக்களே கண்கூடாக பார்த்து வருகிறார்கள்.
அதனால்தான் அவர்கள் இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். பா.ஜனதாவினர் திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது அரசியல் ஆதாயம் தேடத்தான். திப்பு ஜெயந்தி விழா கடந்த 4 ஆண்டுகளாகவே கொண்டாடப்பட்டுதான் வருகிறது. அப்படி இருக்கையில் பா.ஜனதாவினர் இப்போது எதிர்ப்பு தெரிவிப்பது தேவையில்லாத ஒன்று.
கருத்து சொல்ல விரும்பவில்லை
முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டிருப்பது பற்றி கேட்கிறீர்கள். தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
இதில் மாற்று கருத்து கிடையாது. ஜனார்த்தன ரெட்டியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இதில் உள்ள உண்மை நிலவரங்களை போலீசார் வெளியே அம்பலப்படுத்துவார்கள். அதற்குமேல் இதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story