போலீஸ்காரரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்
போலீஸ்காரரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற 2 ரவுடிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு,
போலீஸ்காரரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற 2 ரவுடிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
கொலை
பெங்களூரு ஹெப்பால் அருகே வசித்து வந்தவர் சேத்தன். இவர், கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி தனது நண்பர் வினயை கே.ஆர்.புரம் அருகே பசவனபுராவில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவரை மர்மநபர்கள் சிலர் கடத்தி கொலை செய்தார்கள். மேலும் சேத்தனின் உடலை பெங்களூரு புறநகர் ஒசகோட்டையில் மர்மநபர்கள் எரித்திருந்தனர். இதுகுறித்து ஒசகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், கே.ஆர்.புரம் அருகே வசிக்கும் ரவுடிகளான நவீன்குமார் என்ற அப்பு, கிரீஸ் என்ற கிரி ஆகிய 2 பேரும் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து சேத்தனை கே.ஆர்.புரம் அருகே பசவனபுராவில் வைத்து கடத்தி கொலை செய்ததுடன், அவரது உடலை ஒசகோட்டைக்கு கொண்டு சென்று எரித்தது தெரியவந்தது. அத்துடன் தனது எதிர்கோஷ்டியை சேர்ந்த ரவுடி ஹரீசின் கூட்டாளி தான் சேத்தன் என்று கருதி, தவறாக அவரை ரவுடிகள் நவீன்குமார், கிரீஸ் கொலை செய்திருந்ததும் தெரிந்தது.
2 ரவுடிகள் சுற்றி வளைப்பு
பின்னர் இந்த வழக்கு ஒசகோட்டையில் இருந்து கே.ஆர்.புரத்திற்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, கே.ஆர்.புரம் போலீசார், சேத்தன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் நவீன்குமார், கிரீஸ் ஆகியோரின் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்தார்கள். அவர்கள் 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் நவீன்குமாரும், கிரீசும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்கள் 2 பேரையும் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து துணை போலீஸ் கமிஷனர் அப்துல் அஹாத் உத்தரவிட்டார். இதையடுத்து, கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராம் தலைமையிலான தனிப்படை போலீசார், ரவுடிகள் நவீன்குமார், கிரீசை தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் காடுகோடி அருகே நவீன்குமாரும், கிரீசும் மோட்டார் சைக்கிளில் செல்வதாக இன்ஸ்பெக்டர் ஜெயராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர், போலீஸ்காரர்களுடன் ஜீப்பில் அங்கு விரைந்து சென்றார். போலீசார் வருவதை பார்த்ததும் ரவுடிகள் நவீன்குமாரும், கிரீசும் மோட்டார் சைக்கிளில் வேகமாக புறப்பட்டு சென்றார்கள். உடனே அவர்களை, போலீசார் ஜீப்பில் பின்தொடர்ந்து சென்றனர். மேலும் காடுகோடி-ஒசகோட்டை ரோட்டில் வைத்து 2 ரவுடிகளையும் போலீசார் சுற்றி வளைத்தனர்.
துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்
அப்போது திடீரென்று நவீன்குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியால் 3 ரவுண்டு சுட்டார். அந்த குண்டுகள் போலீஸ் ஜீப்பின் பின்பகுதியை துளைத்தது. அதிர்ஷ்டவசமாக போலீசார் மீது படாத காரணத்தால், அவர்கள் உயிர் தப்பித்தார்கள். பின்னர் ரவுடிகள் நவீன்குமார், கிரீசை பிடிக்க போலீஸ்காரர்கள் முயன்றனர். உடனே தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர்களை 2 பேரும் தாக்கினார்கள். இதில், போலீஸ்காரர் முனிராஜிக்கு பலத்தகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜெயராம் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ரவுடிகளை நோக்கி சுட்டார். இதில், ரவுடிகள் நவீன்குமார், கிரீசின் கால்களில் குண்டு துளைத்தது. இதனால் 2 பேரும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்கள். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். உடனடியாக நவீன்குமாரும், கிரீசும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரபரப்பு
இதுபோல, ரவுடிகள் தாக்கியதில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் முனிராஜும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்தை பார்வையிட்டு துணை போலீஸ் கமிஷனர் அப்துல் அஹாத் விசாரணை நடத்தினார். அப்போது போலீஸ்காரர்களை ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதுடன், கத்தியால் தாக்கியதால் தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் ஜெயராம், ரவுடிகள் நவீன்குமாரையும், கிரீசையும் சுட்டுப்பிடித்தது தெரியவந்தது.
அதே நேரத்தில் ரவுடிகள் நவீன்குமார், கிரீஸ் ஆகியோர் மீது 3 கொலை வழக்குகள், 2 தாக்குதல், கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவற்றில் முன்னாள் கவுன்சிலரின் கணவர் சீனிவாஸ் கொலை வழக்கும் நவீன்குமார், கிரீஸ் மீது உள்ளது. கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story