வாகன திருட்டு வழக்கு: மேலும் 38 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் - தலைமறைவான 5 பேரை பிடிக்க தேடுதல் வேட்டை
வாகனங்களை திருடிய வழக்கில் மேலும் 38 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள 5 பேரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை,
கோவையில் திருடப்படும் இருசக்கர வாகனங்கள் ஆம்னி பஸ்கள் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு கடத்தப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரணுக்கு புகார் வந்தது. அவருடைய உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த ரசூல் முகைதீன் (வயது 43) என்பவர் திருடிய மோட்டார் சைக்கிள்களை ஆம்னி பஸ்கள் மூலம் நெல்லைக்கு கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ரசூல் முகைதீனை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் தனது நண்பர்களான இசக்கிபாண்டி, மாடசாமி, துரை, மொய்தீன், மூசா ஆகியோருடன் சேர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 150 இருசக்கர வாகனங்கள் திருடியது தெரிந்தது.
மேலும் ரசூல் முகைதீன் தான் இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். உடனே போலீசார் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் இருந்து 41 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து திருட்டுப்போன மற்ற இருசக்கர வாகனங்களை மீட்க வேண்டியது இருந்ததால், ரசூல் முகைதீனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அங்குள்ள இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் கடைகளில் ரசூல் முகைதீன் நிறுத்தி இருந்த 38 மோட்டார் சைக்கிள்களை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் கோவையில் திருடப்பட்டது ஆகும். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் வேறு எங்காவது திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை ரசூல் முகைதீனும் அவருடைய நண்பர்களும் நிறுத்தி இருக்கிறார்களா? என்பதை அறிய தனிப்படை போலீசார் சிலர் ஏர்வாடி பகுதியில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள், ரசூல் முகைதீன் நண்பர்களான இசக்கிபாண்டி, மாடசாமி, துரை, மொய்தீன், மூசா ஆகியோரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இது குறித்து தனிப்படையை சேர்ந்த போலீசார் கூறும்போது, தலைமறைவாக இருக்கும் 5 பேர் குறித்த முக்கிய தகவல் கிடைத்து உள்ளது. அதை வைத்து தான் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறாம். விரைவில் அவர்களை பிடித்து விடுவோம். மொத்தம் 150 இருசக்கர வாகனங்கள் திருட்டு போனது. தற்போது மீட்ட 38 வாகனங்கள் உள்பட இதுவரை 79 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து உள்ளோம். மீதம் உள்ளவற்றையும் கண்டறிந்து விரைவில் பறிமுதல் செய்து விடுவோம் என்றனர்.
Related Tags :
Next Story