வெவ்வேறு விபத்துகளில் மெக்கானிக் உள்பட 3 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் மெக்கானிக் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 12 Nov 2018 3:30 AM IST (Updated: 12 Nov 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு, சின்னாளபட்டி பகுதிகளில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் மெக்கானிக் உள்பட 3 பேர் பலியாகினர்.

வத்தலக்குண்டு, 


நிலக்கோட்டை அருகே உள்ள நூத்துலாபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் ஆனந்தகுமார் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த தவசி மகன் முரளி (21). இவர்கள் 2 பேரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் ஆனந்தகுமாரும், முரளியும் வத்தலக்குண்டுவில் உறவினர் ஒருவரை பார்க்க சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மல்லனம்பட்டி அருகே வந்தபோது சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த யாகப்பன்பட்டி மருதாசிபுரத்தை சேர்ந்த யேசுராஜ் மகன் அந்தோணி (19). இவர் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர், அதே பகுதியை சேர்ந்த உறவினர் யூஜின் (14) என்பவருடன் சேர்ந்து நரசிங்கபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சின்னாளபட்டி அருகேயுள்ள தேவஅழகர்பட்டி என்னுமிடத்தில் திண்டுக்கல்லில் இருந்து வெள்ளோடு நோக்கி சென்ற லாரி அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அந்தோணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த யூஜினை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story