அவினாசி வேலாயுதம்பாளையத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்


அவினாசி வேலாயுதம்பாளையத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:45 PM GMT (Updated: 11 Nov 2018 10:35 PM GMT)

அவினாசி வேலாயுதம்பாளையத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அவினாசி,

அவினாசி வேலாயுதம்பாளையத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் பாரதிவீதி, காசிக்கவுண்டன்புதூர், மங்கலம் ரோடு, ராயன் கோவில் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுகாதார சீர்கேட்டால் அப்பகுதி மக்களுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் “எங்கள் பகுதியில் தெருக்களில் குப்பைகள் மூடை மூடையாக கொட்டிக்கிடக்கிறது. ராயன் கோவில் காலனி, திருப்பொக்கொளியூர் மடம் அருகில் பாரதிவீதி உள்ளிட்ட பல இடங்களில் வருட கணக்கில் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே கிடக்கிறது. சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் கழிவுநீர் ஓடுகிறது. அவினாசி மங்கலம் ரோட்டில் தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இதன் அருகில் கழிவுநீர் பல மாதங்களாக குட்டைபோல் தேங்கி நிற்கிறது. அதில் ஏராளமான குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி மூடை மூடையாக கொட்டி கிடக்கிறது.

அந்த கழிவுபொருட்களிலிருந்து உருவாகும் புழுக்கள் குட்டை நீரில் அதிக அளவில் உள்ளது. ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதி மக்களுக்கு சளி, காய்ச்சல் என சிறுவர், சிறுமியர் உள்பட பலருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் வீதிகளை சுத்தம் செய்வதில்லை, கொசு மருந்தும் அடிப்பதில்லை. வேலா யுதம்பாளையம் ஊராட்சியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி கிடையாது.

இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக்கூறியும் பயன் இல்லை. மாதம் ஒருமுறைதான் குடிநீர்வினியோகம் செய்யப்படுகிறது. தண்ணீருக்காக தினமும் அலைய வேண்டியுள்ளது. முறையாக அனைவருக்கும் குடிநீர் வழங்கவேண்டும். வேலாயுதம்பாளையம் முழுவதும் ஆங்காங்கே பல மாதங்களாக கொட்டிக்கிடக்கும் குப்பைகள் கழிவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Next Story