வசாய் அருகே நடுக்கடலில் படகுகள் மோதல்; மீனவர் மாயம்
வசாய் அருகே நடுக்கடலில் படகுகள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மீனவர் ஒருவர் மாயமானார்.
வசாய்,
வசாய் அருகே நடுக்கடலில் படகுகள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மீனவர் ஒருவர் மாயமானார்.
படகுகள் மோதி விபத்து
பால்கர் மாவட்டம் வசாயில் இருந்து நேற்று முன்தினம் மார்னிங் ஸ்டார் என்ற படகில் 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். வசாய் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 15 நாட்டிகல் மைல் தொலைவில் சென்ற மீனவர்கள், நள்ளிரவு 1.15 மணியளவில் நடுக்கடலில் வலைவீசி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, மீனவர்களின் படகு அங்கு வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத மற்றொரு படகின் மீது மோதி உள்ளது.
மீனவர் மாயம்
இதனால் மீனவர்களின் படகு கவிழ்வது போல் சாய்ந்து உள்ளது. இதில் படகில் இருந்த ஒரு மீனவர் கடலுக்குள் தவறி விழுந்து விட்டார். மற்ற 6 பேரும் படகை பிடித்து கொண்டனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர். உடனடியாக இதுபற்றி மீனவர்கள் கடலோர போலீசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, கடலோர போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் கடலில் சென்று மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story