கோவையில் 22-ந் தேதி நடக்கிறது பிரதேச ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு
கோவையில் பிரதேச ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு வருகிற 22-ந் தேதி நடக்கிறது.
கோவை,
இது தொடர்பாக கோவை பிரதேச ராணுவ (டெரிடோரியல் மிலிட்டரி) மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவையில் உள்ள 110-வது பிரதேச ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு வருகிற 22-ந் தேதி காலை 6 மணி முதல் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இதில் சோல்ஜர் ஜெனரல் டூட்டிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சோல்ஜர் டிரேட்ஸ்மென் பதவிக்கு பிளஸ்-2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
சோல்ஜர்ஸ் டிரேட்ஸ்மென் பதவிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 42 வயது வரை. உயரம்-160 செ.மீ. மற்றும் அதற்குமேல். மார்பளவு-77 செ.மீ. (5 செ.மீ. மார்பளவு விரிவடைய வேண்டும்). எடை-50 கிலோ. மருத்துவ தகுதி அனைத்து வகையிலும் பொருத்தமாக இருக்க வேண்டும்.
ஆட்கள் தேர்வின் போது, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்-10, குடும்ப புகைப்படங்கள்-4, பான் கார்டு அசல், விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் மற்றும் சகோதரர், அக்காள், தங்கை, பெற்றோர் ஆகியோரின் ஆதார் கார்டுகள் அசல், கல்வி மாற்றுச்சான்றிதழ் மற்றும் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களும் அசல், சாதிச்சான்றிதழ் அசல், நடத்தை சான்றிதழ் அசல், புகைப்படம் ஒட்டிய இருப்பிட சான்றிதழ் அசல், திருமணம் ஆனவர் என்றால் திருமணம் பதிவு செய்ததற்கான சான்றிதழ் அசல், மனைவியின் கல்வி மதிப்பெண் பட்டியல் அசல், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அசல், மனைவியுடன் சேர்ந்து தொடங்கப்பட்ட வங்கி பாஸ்புத்தகம் அசல் ஆகிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் அரசு வேலை மற்றும் சுய தொழில் பணிபுரிபவர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரி பவர்கள், முன்னாள் என்.சி.சி. மாணவர்கள், துப்பாக்கி சுடுதலில் தேர்ச்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மை சான்றிதழ் அதாவது ஆட்சேபனையில்லா சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story