மர்ம காய்ச்சலுக்கு குழந்தைகள் உள்பட 4 பேர் பலி : பன்றிக்காய்ச்சலால், ஏட்டு உள்பட 3 பேர் உயிரிழப்பு


மர்ம காய்ச்சலுக்கு குழந்தைகள் உள்பட 4 பேர் பலி : பன்றிக்காய்ச்சலால், ஏட்டு உள்பட 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Nov 2018 3:00 AM IST (Updated: 12 Nov 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

மர்ம காய்ச்சலுக்கு குழந்தைகள் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க செயலாளர் பன்றிக்காய்ச்சலால் இறந்தார்.

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆனந்தகுடியை சேர்ந்த சக்திவேல் மகன் உதயகுமார் (வயது 9). இவன் ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயகுமாருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டதால், அவனை பெற்றோர், சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு உதயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள வடகொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த எழிலரசன்-கோமதியம்மாள் தம்பதிக்கு யுவஸ்ரீ என்ற 8 மாத குழந்தை இருந்தது. இந்த நிலையில் யுவஸ்ரீக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு இருந்ததால், அவளை சிகிச்சைக்காக பிரம்மதேசத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். இதையடுத்து யுவஸ்ரீ, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தாள்.

ஈரோடு மாவட்டம் கொளந்தபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து மகள் நைனிகா. 9 மாத குழந்தையான இவளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாள். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தைக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால், அதே தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் இல்லாததால் வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு, நீங்கள் முதலில் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கே கொண்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து குழந்தையை முதலில் சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கும் கொண்டு சென்ற நிலையில், குழந்தையை பரிசோதித்துவிட்டு நைனிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, நாமகிரிபேட்டை அருகேயுள்ள சின்னகாக்காவேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினிதேவி. இவர்களுக்கு சன்மிதாஷாலினி (வயது 2½) பெண் குழந்தை இருந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென்று சன்மிதாஷாலினிக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது.

இதையொட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை சன்மிதாஷாலினி நேற்று முன்தினம் இரவு இறந்தாள்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூரை சேர்ந்தவர் பாண்டியன் (60). இவர், சேப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டியனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.

ஆனால் காய்ச்சல் குணமாகாததால், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று முன்தினம் பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் ஆதிகுரு. கூலித்தொழிலாளியான இவரது மகன் ஆதிசங்கர் (12). மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்த இந்த சிறுவனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஆதிசங்கருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவன் பரிதாபமாக இறந்தான்.


திருச்சி மாநகர ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணியாற்றி வந்த செல்லதுரை (46) பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.30 மணிக்கு ஏட்டு செல்லதுரை பரிதாபமாக இறந்தார்.

Next Story