திருப்பத்தூர் அருகே இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை வரதட்சணை கொடுமை காரணம் என தந்தை குற்றச்சாட்டு


திருப்பத்தூர் அருகே இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை வரதட்சணை கொடுமை காரணம் என தந்தை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Nov 2018 10:30 PM GMT (Updated: 12 Nov 2018 1:38 PM GMT)

திருப்பத்தூர் அருகே இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்ததே தனது மகள் சாவுக்கு காரணம் என போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.

திருப்பத்தூர், 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கொரட்டி கிராமத்தை அடுத்த தண்டுகாரனூரை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் மணிகண்டனுக்கும் (வயது 30), கிருஷ்ணகிரி அருகே உள்ள மலையாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த மார்த்தாண்டன் என்பவரது மகள் சத்யாவுக்கும் (24) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் மனைவியுடன் மணிகண்டன் மலையாண்டஅள்ளி கிராமத்திலயே வசித்து வந்தார். அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாமனார் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறில் மனைவியை தனது ஊரான தண்டுகாரனூருக்கு அழைத்து வந்து விட்டார்.

இங்கும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை சத்யா, வீட்டில் இருந்தபோது வி‌ஷத்தை குடித்து விட்டார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது சத்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து சத்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது சத்யா வி‌ஷத்தை குடித்து விட்டதாக தகவல் வந்தவுடன் நான் மருத்துவமனைக்கு வந்தேன். இங்கு இறந்து விட்டதாக தெரிவித்தனர் என்றார்.

இதனிடையே சத்யா இறந்ததை கேட்டு அவரது தந்தை மார்த்தாண்டன், தாயார் மற்றும் உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இங்கு தாலுகா போலீஸ் நிலையத்தில் மார்த்தாண்டன் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரில் ‘‘எனது மகளை மணிகண்டன் துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த 4 தினங்களுக்கு முன்பு மகள் சத்யா என்னிடம் பேசும்போது கணவர் மணிகண்டன் வரதட்சணை கேட்டு கழுத்தில் மிதித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். எனவே எனது மகள் சாவுக்கு காரணமான அவளது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.


Next Story