ஆற்காடு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
ஆற்காடு அருகே கத்தியவாடி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு,
ஆற்காட்டை அடுத்த கத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னவேலு (வயது 57), கூலித்தொழிலாளி. இவரது மனைவி குப்பம்மாள் (55). இவர்களுக்கு சிகாமணி(30), மணி(28) என்ற 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் வீட்டின் சுவர் மண்ணால் கட்டப்பட்டதாகும்.
தினமும் காலையிலேயே சின்னவேலு, மகன்கள் சிகாமணி மற்றும் மணி ஆகியோர் வேலைக்குசென்று விடுவர். அதன்படி அவர்கள் வேலைக்கு சென்றிருந்தனர்.
இநத நிலையில் குப்பம்மாள், வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வலுவிழந்து காணப்பட்ட மண் சுவர் திடீரென இடிந்து குப்பம்மாள் மீத விழுந்தது. இதனால் குப்பம்மாள் அலறினார். சுவர் இடிந்து விழுந்த சத்தத்தை கேட்டும் குப்பம்மாளின் அலறலை கேட்டும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அங்கு ஓடி வந்தனர்.
அப்போது குப்பம்மாள் இடிபாடுகளில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தார். உடனடியாக பொதுமக்கள் இடிபாடுகளில் இருந்து குப்பம்மாளை மீட்டனர். ஆனால் அவர் இறந்து கிடந்தது அதன்பின்னரே அவர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த குப்பம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.