தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயற்சி மாயமான மனைவியை கண்டுபிடித்து தர கோரிக்கை
மாயமான மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஐஸ் வியாபாரி மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45), ஐஸ் வியாபாரி. இவருடைய மனைவி முருகம்மாள் (36). இவர்களுடைய மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாரியப்பன் தனது மகளுடன் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தார்.
பின்னர் நுழைவாயில் அருகே திடீரென உடையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீதும், தனது மகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடி சென்று மாரியப்பனின் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து மாரியப்பனையும், அவருடைய மகளையும் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. முரும்மாளுக்கும், அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மாரியப்பன் மனைவியை கண்டித்து உள்ளார். இதுதொடர்பாக கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முருகம்மாள் வீட்டில் இருந்த 13 பவுன் நகை மற்றும் பணத்தை எடுத்து கொண்டு மாயமாகி விட்டார். அந்த வாலிபரையும் காணவில்லை. எனவே மனைவியை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகளுடன் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.