தெலுங்கு கார்த்திகை மாதம் தொடக்கம் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தெலுங்கு கார்த்திகை மாதம் தொடக்கம் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 12 Nov 2018 10:45 PM GMT (Updated: 12 Nov 2018 5:42 PM GMT)

தெலுங்கு கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஓசூர், 

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். தெலுங்கு, கன்னட கார்த்திகை மாதம் நேற்று தொடங்கியது. இந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் மிகவும் விஷேசமான நாளாகும். இதையொட்டி திங்கட் கிழமைதோறும் சிவன் கோவில் களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் விரதம் இருந்து திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.

இந்த நிலையில் தெலுங்கு, கன்னட கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமையையொட்டி நேற்று ஓசூர் சந்திரசூடேஸ்வரர் சாமி மலைக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு ருத்ராபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து மூலவர் மற்றும் மரகதாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும், பெங்களூரு, அத்திப்பள்ளி, மாலூர், சர்ஜாபுரா போன்ற பகுதிகளில் இருந்தும் தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதையொட்டி அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், ஓசூர், சூளகிரி, அத்திமுகம், பாகலூர், பேரிகை ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோவில்களிலும் நேற்று தெலுங்கு, கன்னட கார்த்திகை மாத முதலாவது திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story