அரூர் பிளஸ்-2 மாணவி பலாத்கார வழக்கில் போலீசார் தேடிய ரமேஷ் சேலம் கோர்ட்டில் சரண்
அரூர் பிளஸ்-2 மாணவி பலாத்கார வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட ரமேஷ், சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை வருகிற 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சேலம்,
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவியை, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 22), ரமேஷ் (22) ஆகியோர் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி திடீரென உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சதீஷ், ரமேஷ் ஆகியோரை பிடிக்க அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனிடையே, நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பதுங்கியிருந்த சதீசை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும், தலைமறைவான ரமேசை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில், போலீசாரால் தேடப்பட்ட ரமேஷ் நேற்று மதியம் 12 மணிக்கு சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர், அவரை வருகிற 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் போலீசார் ரமேசை சேலம் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.
Related Tags :
Next Story