அரசு வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தர்ணா - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


அரசு வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தர்ணா - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Nov 2018 10:00 PM GMT (Updated: 12 Nov 2018 6:21 PM GMT)

அரசு வேலை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

செஞ்சி அருகே கம்மந்தூரை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 30), மாற்றுத்திறனாளியான இவர் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். திடீரென இவர், கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து வாயில் கருப்புத்துணி கட்டியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று பொன்னுசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனர். அதன் பின்னர் அவர், கலெக்டர் சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், நான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் கிராம உதவியாளர் பணிக்கு 5 முறை விண்ணப்பித்துள்ளேன். நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டும் வேலை கிடைக்கவில்லை. லஞ்சம் கொடுக்காததால் எனக்கு இதுவரை வேலை வழங்கவில்லை. பல போராட்டங்கள் நடத்தியும் எனக்கு வேலை வழங்கப்படவில்லை. தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம் மற்றும் கவர்னர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.

மேலும் நாட்டார்மங்கலத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொழில் தொடங்க கடன் பெற்றிருந்தேன். எனக்கு வேலையில்லாததால் அந்த கடனை திருப்பிச்செலுத்த முடியவில்லை. எனவே அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் திருக்கோவிலூர் அருகே கோட்டமருதூர் கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் (32) என்பவர் தனக்கு சத்துணவு பணி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனே அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அறிவுறுத்தினர். அதன்பேரில் அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது தந்தை முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியில் இருந்தார். அவர் பணியின்போதே இறந்துவிட்டதால் கருணை அடிப்படையில் அவரது வாரிசான எனக்கு பணி வழங்கக்கோரி பலமுறை மனு கொடுத்தேன். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். 2 பேரின் மனுக்களையும் பெற்ற கலெக்டர், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story