பொக்லைன் எந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 மாணவர்கள் பலி கல்லூரிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்


பொக்லைன் எந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 மாணவர்கள் பலி கல்லூரிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 12 Nov 2018 10:45 PM GMT (Updated: 12 Nov 2018 6:58 PM GMT)

புலிவலம் அருகே பொக்லைன் எந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், கல்லூரிக்கு சென்றுவிட்டு திரும்பிய மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கண்ணனூர் மேற்குத்தெருவை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் விமல்ராஜ்(வயது 18). இதேபோல் நல்லவன்னிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த கொத்தனாரான தர்மராஜ் மகன் நந்தகுமார்(19), கரட்டாம்பட்டி இலுப்பையூர் சாலையை சேர்ந்த சரவணன் மகன் விஜய்(19).

நண்பர்களான விமல்ராஜ், நந்தகுமார், விஜய் ஆகிய 3 பேரும் புத்தனாம்பட்டியில் உள்ள நேரு நினைவு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் தினமும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

அதுபோல் நேற்று காலை 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றனர். அங்கு நடைபெற்ற தேர்வை எழுதிவிட்டு, மதியம் 3 பேரும் கல்லூரியில் இருந்து கரட்டாம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விமல்ராஜ் ஓட்டினார். நந்தகுமார், விஜய் ஆகியோர் பின்னால் அமர்ந்து வந்தனர்.

இலுப்பையூர் அருகே வந்தபோது, அந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தை, பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொட்டி சரிசெய்யும் பணி நடைபெற்றது. அப்போது மணல் அள்ளி கொட்டுவதற்காக இயக்கப்பட்ட பொக்லைன் எந்திரத்தின் இரும்புக்கை மீது மாணவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட விமல்ராஜ், நந்தகுமார் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விஜய் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் உயிரிழந்த விமல்ராஜ் மற்றும் நந்தகுமாரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியபோது நடந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story