ஆமை வேகத்தில் மெட்ரோ ரெயில் பணி: திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்


ஆமை வேகத்தில் மெட்ரோ ரெயில் பணி: திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
x
தினத்தந்தி 12 Nov 2018 10:45 PM GMT (Updated: 12 Nov 2018 6:59 PM GMT)

மெட்ரோ ரெயில் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

திருவொற்றியூர்,

மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். திருவொற்றியூர் டோல்கேட் முதல் விம்கோ நகர் வரை நடைபெறும் மெட்ரோ ரெயில் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும் வியாபாரிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

சென்னையின் பிற பகுதிகளில் மெட்ரோ ரெயில் வேலை நடக்கும் போது அவர்களுக்கு செய்து கொடுத்த வசதிகள் போன்று வடசென்னையில் குறிப்பாக திருவொற்றியூரில் எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் பல இடங்களில் மின்சார விளக்குகள் கூட அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிர் பலி ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக காலடிப்பேட்டை மார்க்கெட்டிலிருந்து எல்லையம்மன் கோவில் வரை கழிவுநீர் குழாய்கள் அகற்றப்பட்டது. அங்கு ஒரு வார காலத்தில் புதிய குழாய்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் 1½ மாதங்கள் ஆகியும் புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படவில்லை.

மாறாக அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள், அலுவலகங்கள், அம்மா உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் கால்வாயுக்குள் செல்லும் படி ஏற்பாடு செய்தனர். தினசரி 2 லாரிகள் மூலம் மழைநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் அகற்றப்படுகிறது. எனினும் மழைநீர் கால்வாயுக்கு அதிக அளவில் கழிவுநீர் வருவதால், மழைநீர் கால்வாய் உடனுக்குடன் நிறைந்து விடுகிறது.

இதனால் மழைநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அதோடு எல்லையம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆழ்துளை குழாயில், கழிவுநீர் கலந்துவிடுவதால் அதில் கிடைக்கும் நீர் குடிக்க பயனற்றதாக மாறி உள்ளது.

மேலும் கழிவுநீர் நிரம்பி வழியும் அந்த மழைநீர் கால்வாய் ஒரு கொசு உற்பத்தி பண்ணையாக மாறி இருக்கிறது. எனவே மெட்ரோ ரெயில் நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி புதிய கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்கான பணிகளை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story