சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு முதியவர் சாவு
சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்
சேலம்,
சேலம் அஸ்தம்பட்டி கள்ளிக்காட்டை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து ஜெயராமன் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது அவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து ஜெயராமன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்து அங்கு வந்த ஜெயராமன் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், அஸ்தம்பட்டி பகுதியில் மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு முறையான மருத்துவ முகாம்கள் நடத்துவதில்லை. சுகாதார அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் நாங்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம்.
இதுபோன்று காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க சுகாதார துறையினர் முகாமிட்டு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். மேலும் எங்கள் பகுதி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story