சிறுமிக்கு பாலியல் தொல்லை; காவலாளிக்கு 5 ஆண்டு சிறை - மகிளா கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொல்லை; காவலாளிக்கு 5 ஆண்டு சிறை - மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Nov 2018 3:30 AM IST (Updated: 13 Nov 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகிளா கோர்ட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.

கோவை, 

கோவை பி.என்.புதூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (வயது 50). இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு கோவிலில் இரவு நேர காவலாளியாக பணி புரிந்தார். மேலும் பகல் நேரத்தில் தனது வீட்டின் அருகே ஒரு பெட்டிக்கடை வைத்தும் நடத்தி வந்தார்.

கடந்த 12.9.2016 அன்று இவரது கடைக்கு 6 வயது சிறுமி ஒருவர் மிட்டாய் வாங்க வந்து உள்ளார். அப்போது அந்த சிறுமியை அவர் கடை உள்ளே வைத்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.

இதனைதொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் செல்வராஜ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ஸ்ரீதேவி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி செல்வராஜிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இந்த அபராத தொகையில் ரூ.23 ஆயிரம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், ரூ.2 ஆயிரம் சட்ட உதவி மையத்திற்கு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரோஜினி ஆஜராகி வாதாடினார்.


Next Story